7:38 pm - Tuesday December 1, 2020

என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?

nudulsகம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.

இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

குப்பையில் போடுங்கள்

ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

ஆதாரத்தோடு நிரூபணம்

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

என்ன சத்துக்கள் இருக்கு?

இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.

உடலுக்கு கெடுதல்தான் வரும்

குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன நிறுவனங்கள். ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

குறைவான சத்துக்கள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை நூடுல்ஸ்சில் மிக மிக குறைந்த அளவிற்கே உள்ளன.

அதிக உப்பு இருக்கு

ஆனால் எல்லா பிராண்ட் நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவுதான் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது.

அதிக கொழுப்பு இருக்கு

இந்த நூடுல்ஸ் உணவில் கொழுப்பும் மிகுதியாக உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

அலட்சியம் காட்டும் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனவே தவிர வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளைந்த மண் விலை நிலமாக மாறிய காரணத்தால் குப்பைகளை கூட உணவுகளாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றன நிறுவனங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.

கடிதம் அனுப்பிய ஆய்வாளர்கள்

இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியும் அதை அலட்சியம் செய்துவிட்டன அந்த நிறுவனங்கள். இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.

விஷத்தை உணவாகக் கொடுக்கிறோம்

எந்தவித சத்துமே இல்லை என்று ஆய்வாளர்கள் கத்தி கதறினாலும் விளம்பரங்கள் மூலம் அவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன நிறுவனங்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் வருங்கால இந்திய சமுதாயத்தினர்.

நிரந்தர நோயாளிகளாக…

மசாலா கலந்த இந்த நூடுல்ஸ் வெறும் குப்பைதான் என்பதை ஒவ்வொரு இந்தியத் தாயும் உணரவேண்டும். இல்லை எனில் நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக மாற நாமே காரணம் ஆகிவிடுவோம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதனால்தான் என்னோட குழந்தைகளுக்கு நான் நூடுல்ஸ் தர்றதில்லை. அதோட ருசியையும் பழக்கினதில்லை. உங்க வீட்ல எப்படி?

Filed in: கட்டுரைகள், வாழ்க நலமுடன்

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.