தினமும் காபி குடிப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா..!

0

காலையில் காபி பருகினால்தான் நிறைய பேருக்கு உற்சாகமே பிறக்கும். காபியில் இருக்கும் காபின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதேவேளையில் காபி பருகுவதில் ஏராளமான நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில் காபிக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காபி குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருப்பதாகவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதற்கு தவறாமல் காபி பருக வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

564 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் காபி பருகாதவர்களை விட, தொடர்ந்து காபி பருகுபவர்களின் எலும்புகள் வலுவாகவும், எலும்பு நிறை அடர்த்தி அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க டாக்டர் சாட் டீல், “மூன்று வளர்சிதை மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக காபி பருகிக்கொண்டிருப்பவர்களின் எலும்பு அடர்த்தி அதிகரித்து இருக்கிறது. மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் குறைவாக இருக்கிறது” என்கிறார்.

ஒரு நபர் எவ்வளவு காபி பருகுகிறாரோ அந்த அளவுக்கு கால்சியம் வெளியேற்றப்படுவதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எலும்புகளின் முக்கியமான கனிமமாக இருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் சம நிலையில் வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேவேளையில் எலும்பு நிறை அடர்த்தி குறைவாக உள்ளவர்கள், கால்சியம் வெளியேற்ற அளவை சரிபார்ப்பதற்கு சோதனை செய்ய வேண்டும் என்றும் டீல் அறிவுறுத்துகிறார்.

மேலும், “நிறைய காபி குடிப்பவர்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் எலும்பு பலவீனமாக இருப்பதாக கருதுபவர்கள் காபி அதிகம் பருகுவதை பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. காபியில் உள்ள குறிப்பிட்ட வளர்சிதை மாற்றங்களை அடையாளம் காண்பதன் மூலம் சாத்தியமான நன்மை கிடைக்கும். எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் புதிய மருந்துகளை உருவாக்குவதற்கு அடித்தளமாகவும் அமையும். நிறைய காபி பருகி, அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி” என்கிறார்.

Leave a Reply