மூல நோய்க்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா..?

0

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

மலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

Leave a Reply