ஒபாமாவின் குடும்ப ரகசியங்கள்

0

அமெரிக்காவின் முதல் குடிமகனாக பராக் உசேன் ஒபாமா தேர்வாவது உறுதி யாகிவிட்டது. உலகையே ஆட்டிவைக்கும் வல்லரசின் அதிகாரப் பீடத்தை அலங்கரிக்கப் போகிறார்.

ஒபாமாவைப் பொறுத்தவரை பல `முதல்கள்’ உண்டு. இந்த உயர்ந்த பதவிக்கு வரும் முதல் கறுப்பினத்தவர், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க வம் சாவளியைச் சேர்ந்தவர், முதல் ஆசியக் கண்ட `வாசம்’ கொண்டவர்! உச்சத்தை எட்டும் எந்த மனிதரின் பின்னணியும் ரொம்ப அட்டகாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாரணம், பராக் ஒபாமா.

ஒபாமாவின் தந்தையான பராக் ஒபாமா சீனியர், கென்யாவைச் சேர்ந்தவர். ஹவாய் தீவுக்குப் படிக்க வந்த இவருக்கும், அங்கே படித்த அமெ ரிக்கா கான்சாஸ் விசிட்டாவை பூர்வீகமாகக் கொண்ட வெள்ளையினப் பெண்மணி ஆன்டன் ஹாமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல், கல்யாணத்தில் முடிந்தது. ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை அதிக காலத்துக்கு நீடிக்க வில்லை. ஹவாயின் தலைநகரான ஹானலூலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி `ஜுனியர்’ ஒபாமா பிறந்தார். அவருக்கு இரண்டு வயதான போதே பெற்றோர் கருத்துவேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.

அப்பா ஒபாமா சீனியர் தனது தாய்நாடான கென்யாவுக்குத் திரும்பிவிட்டார். 1982-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்த அவர், இடையில் மகனைப் பார்த்தது ஒரே ஒருமுறைதான். (சீனியர் ஒபாமா, கென்யாவில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந் தவர். இவர் தனது தந்தையுடன் ஆடுகளை வளர்த்தபடி படித்து வந்திருக்கிறார். ஜுனியர் ஒபாமாவின் தாத்தா, அதாவது சீனியரின் தந்தை ஒரு வெள்ளைக்காரர் வீட்டு வேலையாளாக இருந்திருக்கிறார்!)

விவகாரத்துக்குப் பின் ஒபாமாவின் அம்மா டன் ஹாம், இந்தோனேசியாக்காரரான லோலோ சொயட்டோரோவை திருமணம் செய்துகொண்டார். குடும்பம் இந்தோனேசியா வுக்கே இடம்பெயர்ந்தது. பத்து வயது வரை ஜகார்த்தாவில் படித்தார் ஒபாமா. பின்னர் மீண்டும் ஹவாயில் அம்மாவழி தாத்தா – பாட்டி வீட்டுக்குத் திரும்பினார். இடையில் ஹவாய் வந்து, இந்தோனேசியாவுக்குத் திரும்பிவிட்ட அம்மா டன்ஹாம், கர்ப்பப்பை புற்றுநோயால் 1995-ம் ஆண்டு இறந்தார்.

1979-ம் ஆண்டு வரை ஒபாமாவுக்கு ஹவாயில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, தான் கொஞ்சம் `அப்படி இப்படி’ இருந்ததை வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா. மதுபானத்துடன், மரிஜ×வானா, கொக்கைன் போன்ற போதைப்பொருட்களையும் சகஜமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

உயர்நிலைப் பள்ளி படிப்புக்குப் பின் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம் பெயர்ந்தார் ஒபாமா. அங்கே கல்லூரிப் படிப்புகளும், பணிகளுமாக ஆண்டுகள் ஓடின. இடையில் 1988-ம் ஆண்டு ஒரு தடவை கென்யாவுக்குப் பயணம் செய்தார் ஒபாமா. அங்கு தனது தந்தை வழி உறவினர்களையும் முதல்முறையாக சந்தித்துப் பேசினார் அவர்.

1988-ம் ஆண்டில் ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் நுழைந்தார் ஒபாமா. அங்கு படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதால், பிரசித்தி பெற்ற `ஹார்வர்டு லா ரிவ்ï’ என்ற சட்டப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ஆனார். இப்பெருமை பெற்ற முதல் கறுப்பினத்தவர் என்றவகையில் பரவலாகக் கவனிக்கப்பட்டார் ஒபாமா.

சீரியசாகப் போய்க்கொண்டிருந்த ஒபாமாவின் வாழ்க்கையிலும் காதல் வசந்தம் வீசியது.

சட்டப் படிப்பை முடித்த ஒபாமா, 1989-ம் ஆண்டு சிகாகோவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஒபாமாவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் தான் இந்நாள் மனைவி மிசல் ராபின்சன்.

செனட் உறுப்பினரான ஓபாமா, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டதுமே அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் பத்திரிகைகள் அலசின.

அப்போது சில பத்திரிகைகள் பராக்- மிசல்லை ஆதர்சத் தம்பதி என்றும், சில பத்திரிகைகள், `இல்லையில்லை… அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் உண்டு’ என்றும் தம்பட்டம் அடித்தன.

பராக்- மிசல்லின் காதல் காலத்தைக் கவனித்தால் சினிமா பாணியில் துரத்தித் துரத்தி மிசல்லின் சம்மதத்தைப் பெற்றவர் ஒபாமாதான்.

தான் பணிபுரியும் சட்ட நிறுவனத்துக்கு சட்டத் துறையில் கலக்கும் ஒரு நபர் வரப் போகிறார் என்ற பேச்சு பரபரப்பாக அடிபட்டபோதும், மிசல் ரொம்பவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஒபாமாவின் புகைப்படமும் மிசல்லை அதிகம் ஈர்க்கவில்லை.

“அவர்’ ஒண்ணும் அவ்வளவு அசத்தலாக இல்லை. கொஞ்சம் கோமாளித்தனமாகத் தெரிந்தார். தவிர, அவரது பெயரைக் கேள்விப்பட்டபோது மற்றவர்களைப் போல நானும் என்ன பெயர் இது என்று வியந்தேன்” என்கிறார் மிசல்.

ஆனால் மிசல் எதிர்பார்த்ததை விட ஒபாமா அமைதியானவராகவும், அதிக தலைக்கனம் இல்லாதவராகவும் இருந்தாராம். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் மிசல்லுடன் `டேட்டிங்’ செல்ல விரும்புவதாக ஒபாமா கூறியபோது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒபாமா திரும்பத் திரும்பக் கேட்டும் மிசல் மறுத்துவிட்டார். தனக்குப் பதிலாக வேறு பெண்களை ஒபாமாவுடன் அனுப்பி விடவும் முயன்றிருக்கிறார்.

ஆனால் ஒருவழியாக `டேட்டிங்’க்குக்கு சம்மதித்துவிட்டார் மிசல். ஓட்டல், படம் என்று ஜாலியாக கழிந்தது அந்நாள். ஐஸ்கிரீமுடன் முதல் முத்தத்தைப் பகிர்ந்துகொண்டது ஒபாமா – மிசல் ஜோடி. `நான் உன்னை முத்தமிடலாமா?’ என்று பணிவாகக் கேட்டாராம் ஒபாமா. “அந்த முத்தத்தில் சாக்லேட் ருசி தெரிந்தது!” என்று `ஜொள்ளுகிறார்’ வருங்கால அதிபர்.

இந்த ஜோடியின் பழக்கத்தை அறிந்த மிசல்லின் குடும்பம், ஒபாமாவை `ஏற்றுக்கொண்ட’ விதமும் வித்தியாசமானது. கூடைப்பந்து பயிற்சியாளரான மிசல்லின் சகோதரர் கிரேக் குக்கு, ஒரு நபர் கூடைப்பந்து விளையாடும் விதத்தை வைத்தே அவரைக் கணித்து விடலாம் என்று நம்பிக்கை.

அதன்படி ஒபாமாவுக்கும் `கூடைப்பந்துத் தேர்வு’ நடைபெற்றது. அதில் தேறிவிட்டார் அவர். “ஒபாமா விளையாடி யதை பார்த்தபோது அவர் நம்பிக்கை மிக்கவராகவும், அணியோடு சேர்ந்து செயல்படுபவராகவும் தெரிந்தார்” என்று திருப்தி தெரிவித்தார் கிரேக். அந்தத் தேர்வில் ஒபாமா தோற்றிருந்தால் என்னவாகியிருக்கும் எனத் தெரியவில்லை என்றும் சிரிக்கிறார்.

திருமணத்துக்குப் பின் ஒபாமா- மிசல் தம்பதிக்கு இடையிலும் பொதுவான சிறுசிறு சச்சரவுகள், சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. வழக்கறிஞர் பணி, அரசியல் என்று ஒபாமா காலில் வெந்நீரைக் கொட்டியபடி ஓடிக்கொண்டேயிருக்க, இரு மகள்கள் (மலியா ஆன்- நடாஷா) மற்றும் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் தவித்துப் போயிருக்கிறார் மிசல். “உங்களைப் பத்தித்தான் உங்களுக்குக் கவலை. குடும்பத்தின் மீது அக்கறையே இல்லை” என்றுகூட ஒருமுறை ஒபாமாவிடம் மிசல் குமுறித் தீர்த்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் ஒபாமா குடும்பப் பாசம் மிக்கவர் என்கிறது அவரது நட்பு வட்டாரம். தினமும் இரவு 8 மணிக்கெல்லாம் குழந்தைகள் தூங்கிவிடுவார்கள் என்பதால் அடித்துப் பிடித்து 7.50-க்கு வீட்டுக்குப் போய்விடுவாராம்.

இவர்களின் திருமணம் 16-வது ஆண்டாக வெற்றிநடை போடுவதே இத்தம்பதியின் அன்புப் பிணைப்புக்குச் சாட்சி என்கிறார்கள் உறவினர்கள்.

உலக நாடுகளில் எல்லாம் எந்தவிதத்திலாவது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது அமெரிக்கா. (அவர்களின் பொருளாதார தடுமாற்றம் நம்மூரிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஓர் உதாரணம்.) ஒபாமா அந்நாட்டு அரசியலிலும், உலகளவிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற பொதுவான நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்!

ஆனால் உலகமே கவனிக்க ஒபாமா வெள்ளை மாளிகையில் கம்பீரமாகக் காலடி வைக்கும்போது அவர் பின்னால் ஒரு பெண்மணி இருப்பார்-

அவர், மிசல் ஒபாமா!

Leave a Reply