நான் மன நோயாளியா…?

0

sick

நான் யார்…?
தாய் மண்ணின் தகனத்தால்
மேற்காவுகை சருகாகி
அன்னியரின் பாதங்களில்
அடைக்கலம் கேட்ட அகதியா…?

அல்லது…

ஈழத்தாயின் சேலையில்
“தீ” பரவ அதையணைக்க சகோதரர்கள் முயல….
அவர்கள் சாம்பல் காற்றில் கலக்க…
கண்டும் காணாதவனாய்
அன்னிய மண் தேடிய
அறிவிளந்தவனா…?

நான் யார்….?
“அண்ணாச்சி அண்ணாச்சி ஐஸ்பழம் வாங்கித்தா”
என்ற என் தங்கை – இன்று
எனை வெறுத்து
ஈழத்தாயின் மானம் காக்க
இயந்திரத்துப்பாக்கி சுமக்கிறாளாமே…!
நான்
கோளை என்பதனால்தானே….?

நான் யார்….?

“என் இதயம் துடிப்பதெல்லாம் உனக்காகத்தான்”
என்ற என் காதலி
உடையின்றி.. உணர்வின்றி.. உயிரின்றி..
இராணுவ முகாமருகே
உருக்குலைந்து கிடந்தாளாமே…!
நான் உணர்ச்சியற்றவன் என்பதனால்த்தானே…?

நான் யார்…..?

அடிமை விலங்கொடிக்க
வீறுகொண்ட என் தம்பி
தியாகிகளின் நினைவாலயத்தில்
காலவரையற்றுத் துயில்கிறானாமே…!
ஆனால் எனக்கு இங்கு
காலவரையற்ற வதிவிட உரிமை…
நான்உணர்விழந்தவன்தானே….?

நான் யார்….?

அன்னியரிடம்
மூளைச்சலவை பெற்ற முடவனா….?

நான் யார்…..?
எனக்கே தெரியாதபோது….

உணர்வின்றி
உயிர் எழுப்பிய தேடல்கள்
மங்கலாக….மங்கலாக….
விழித்துக் கொள்கிறேன்

சுற்றியிருந்தவர்களிடம்
சுரண்டிக்கேட்கிறேன்

நான் யார்….?

ஜேர்மன் வைத்தியரின்
உதடுகள் உச்சரித்தது
“நீ ஒரு மனநோயாளி!”

(நன்றி: இளைஞன் 1994)

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply