உறவுப்பிச்சை தாருங்கள்

0

கனவொன்று கண்டேன்
அது கவியொன்றைக் கக்கியது
கனவின் சொர்க்கங்கள்
காட்டிய முகவரிக்குரியவ(ர்)ள்
நீயானால்
என் இதயம் சுரப்பதெல்லாம்
உனக்காகத்தான்…

தேசத்தெருக்களில் வீசும்
சோகக்காற்றின் கொடுரத்தால்
பஞ்சாய்ப் பறந்து
நான் தனிமையாய் விழுந்த இடம்
ஜேர்மனி….

நேசம்…உறவு…பாசம்…பந்தம்….
எனும் வார்த்தைகளின்
அர்த்தங்களையே மறந்தவனாய்…..

தனிமை எனும்
இரும்புக்கரங்களால் நசுக்கப்பட்டவனாய்…..
என் இதய அணுக்களுடன் சங்கமிக்க
எனக்காய்ப் பிறந்தவளைத் தேடியவனாய்….

பிறந்த மண்ணின் வாசனையை
நுகரத்துடிக்கும் மானுடனாய் நான்…..

ஐரோப்பிய மக்களின் சல்லாப வாழ்க்கை – எனக்கு
நரிகளின் ஊளையிடுதல்களாகவும்
ஆந்தைகளின் அலறல்களாகவும்…..
தொடைக்குமேல் துண்டுகட்டும் தேசமிது….
வெம்பிப் பழுத்த கூட்டம்
உதடுகள் உரசுவதே
இன்பமெனும் தேசமிது….

அன்பும் பாசமும் அன்னியப்பட்டு
உடலின் உறவுகள் மட்டுமே
மேலோங்கும் தேசமிது…
நேற்று….இன்று….நாளை….
மரம் விட்டு மரம் தாவும் மந்திகளாய்….
இதயம் விட்டு இதயம் தாவும் இளசுகளின் தேசமிது…..

ஐரோப்பா ….
பெயரளவில் பெரியதுதான்
காரும் , வீடும் , கம்பியூட்டர் வாழ்க்கையும்தான் – ஆனால்
மனசு மட்டும் தெருவோரச்சாக்கடையினுள்
தத்தளிக்கிறது

பகலில் குருடனாய்…. இருட்டில்
பார்வையுடையவனாய்….
விரக்தி எனும் ஊர்வலத்தில் நகரும் சோகத்தேராய்….
நேசத்திற்காய்த் தவிக்கும் மானுடனாய் நான் ….

தனிமைச் சிறையில் சிக்கி
இருபத்து இரண்டு வயதில்
உயிரறுந்து போகும் எனக்கு
யாராயினும் உறவுப்பிச்சை தாருங்கள்…..!
அணணனாய்….தம்பியாய்…..நண்பனாய்…..
நேசத்திற்குரியவனாய்….
என்னை எதுவாயினும்
நினைத்துக் கொள்ளுங்கள்

எனக்குத் தேவையெல்லாம்
“உறவு”
எனும் உயிர்ப்பொருள்தான்

கிடைக்குமா இல்லையா…?
என் சுவாச அணுக்கள் துடிக்க
செயற்பட வேண்டுமாயின்
உங்கள் பதில்களில் தான்….

(நன்றி: இளைஞன் 1994)

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply