அன்புள்ள அப்பா…..!
எனை விலைபேசி விற்க
வீடொன்று தேடுவதாய்
சகானா எழுதியிருந்தாள்.
வேண்டவே வேண்டாம்
எனை விலைபேச வேண்டாம்…..!
மூன்று வருடமாய்
முடி உதிர்ந்து
கை கறுத்து
முதுமையடைந்தவனாய்
போறணைத் தணலுடன்
போராடி
உளைத்த பணத்தை
தளிம்பு மாறாக்கரங்களினால்
தங்கையின் திருமணத்திற்காய்
தானஞ்செய்த தனஞ்சயன்……
அக்காவின் வயசு
வட்டுக்குள்வந்து விட்டது – நீ
ஆறுவருடமாய்
ஐரோப்பாவில் இருந்து
ஆகியதென்ன???
போன கிழமைதான்
பக்கத்து வீட்டுப்
பங்கயத்தின் மகன்
பத்து லட்சம்
அனுப்பியிருந்தான்
“இப்போதெல்லாம்
எமது மகன்
உயிரோடு இருப்பதாய் – நாம்
எண்ணுவதில்லை ….”
பெற்றவளின் கடிதம் பார்த்து
வேலையின்றி வீதியில் அலைந்த
விபுலன்
தமக்கையின் தாலிக்காய்
தூள் கடத்தி
அன்னியச் சிறையினுள்
ஆயுட்கைதியாய்…..
மகளின் திருமணத்திற்காய்
மாறிய கடன்
தீர்க்க வழியின்றி
பொலிடோலுடன் புறப்பட்டு
புதைகுளியினுள்
துயிலுற்ற பொன்னுச்சாமி….
காதலில் மூழ்கி
கருதளைத்த
தங்கையின்
தாதம்பாளம் மாற்ற
தடையாய் நின்ற
தங்கத்துக்காய்
கடல் கடந்து
தனையளித்து
மொக்காடுடன்
மெழுகு திரியான
மொணிக்கா….
ஆம்….!
இவையெல்லாம்
காலம் கற்பித்த
வாழ்க்கை வடுக்கள்…..
அன்புள்ள அப்பா…!
பொட்டிடும்
புண்ணியவதிக்காய் – நான்
எவரையும்
சகதியில் தள்ள
அனுமதிக்க மாட்டேன்…
ஐயோ ….!
வேண்டவே வேண்டாம்
விலைபேசும் திருமணம்
எனக்கு
வேண்டவே வேண்டாம்….
ரமேஷ் வவுனியன்.