ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

0

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

சரி, சினிமாத் தொழில் என்பது சூதாட்டம் போன்றது என்பது தெரிந்தும் எதற்காக சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன? நாட்டிலே உள்ளவர்களுக்கெல்லாம் ஜாலியாகப் பொழுதுபோகட்டும் என்கிற பரந்த மனப்பான்மையாலா? பக்கத்து மாநிலங்களில் எல்லாம் எடுப்பதால் நாம் எடுக்காமல் இருந்தால் நம்மைத் தொழில் தெரியாதவர்கள் அல்லது தற்குறிகள் என்று சொல்லிவிடுவார்கள் என்கிற வீராப்பாலா? சினிமா எடுப்பதைத் தவிர வேறு கூலிவேலைகள்கூட செய்யத் தெரியாத பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கலைஞர்களும் சோத்துக்கு சிங்கியடிக்கக்கூடாதே என்கிற பெருந்தன்மையாலா? பருவக்குட்டிகள் ‘பப்’களில் ஆடினால்தானே அடிக்கிறார்கள், திரையில் ஆடினால் எப்படி அடிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்கிற சமயோசிதத்தாலா?

இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் சிரமமானது. எதற்காக ரொட்டிகள் சுடப்படுகின்றன? என்கிற கேள்வி எவ்வளவு எளியதாக இருக்கிறது பாருங்கள், ரொட்டிகள் இரண்டு காரணங்களுக்காக சுடப்படுகின்றன. முதல் காரணம், விற்பதற்கு. இரண்டாவது காரணம் சாப்பிடுவதற்கு. வேண்டுமானால் மூன்றாவதாக ஒரு மறைமுகக் காரணம்கூட சொல்லலாம், உயிர் வாழ்வதற்கு! இவ்வளவுதான் பதில். ஆனால் சினிமா என்பது அப்படி ரொட்டி போல மென்மையானதுமல்ல, அடுமனை அடுப்பில் வெந்ததுமல்ல. ஒவ்வொரு சினிமாவும் எடுக்கப்படுகிற சூழல் ஒவ்வொரு விதமாகவே இருந்து வருகிறது. காலம் மாறும்போது அது ஒட்டுமொத்தமான மாற்றத்தை எதிர்கொள்கிறது என்றபோதும், எந்தக் காலத்திலும் ஒரேமாதிரியான காரணங்களுக்காக சினிமாக்கள் எடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு சினிமாத் தொழில் மீது ஒருவிதமான அக்கறையும் இல்லை என்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள், திடீரென்று ரஜினிகாந்திடமிருந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வருகிறது. நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன், நீங்கள் படம் எடுங்கள் என்று அவர் சொல்கிறார். அதற்கப்புறம் நீங்கள் படம் எடுக்காமல் எப்படி இருக்க முடியும்? எடுக்கவில்லையானால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமுமில்லை, ஆனால் நீங்கள்தான் வலிய வந்த சீதேவியை வாய்க்காலில் பிடித்துத் தள்ளிவிட்டு வேகுவேகென்று வெய்யிலில் நடந்து போகிறீர்கள் என்று அர்த்தம். ஆக, ரஜினிகாந்த்தின் படங்கள் எடுக்கப்படுவதற்கான காரணம், ரஜினி தருகிற கால்ஷீட்தான். குழப்பமாக இருக்கிறதா?

மிஸ்டர் ரோமியோ என்று ஒரு படம் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், அதே நேரத்தில் வெளிவந்தது லவ்டுடே! மிஸ்டர் ரோமியோவில் பிரபுதேவா ஹீரோ. லவ்டுடேயில் விஜய். அப்போது அவர் இளைய தளபதியெல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண ஹீரோ. ஆனால் பிரபுதேவா முக்கியமான ஹீரோவாக இருந்த காலம் அது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு படங்களும் ஒரே நிறுவனத்தால் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டவை. மிஸ்டர் ரோமியோ பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. லவ்டுடே மிகக் கடுமையான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்ட ஒன்று.

லவ்டுடே படத்துக்கு இயக்குனர், நண்பர் பாலசேகரன். இவர் கேட்ட இசையமைப்பாளரைக்கூட தயாரிப்பாளர் கொடுக்கவில்லை. சிவா என்று புதிய இசையமைப்பாளர்தான் அந்தப் படத்துக்கு  இசையமைத்தார். ஆனால் மிஸ்டர் ரோமியோவுக்கு ஏயார்ரகுமான் இசை! டெக்னீஷியன் வரிசையும் முதல் தரம். லவ் டுடேக்கு எந்த சலுகையும் கிடையாது. அதிக லொகேஷன் செலவுக்கு அனுமதியில்லை, பெரிய ஸ்டார்கள் இல்லை. சினிமாஸ்கோப் கூட இல்லை. ஆனால் மிஸ்டர் ரோமியோவில் காஸ்ட்யூம், லொகேஷன், ஆர்ட்டிஸ்ட் என்று ஒரே அமர்க்களம். இதில் இந்தியிலிருந்து அழைத்துவரப்பட்ட ஷில்பா ஷெட்டிவேறு ஹீரோயின்! இதெல்லாம் போதாதென்று மிஸ்டர் ரோமியோவை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இன்னும் இரண்டு பாட்டை வெளிநாட்டில் எடுங்கள் என்று வேறு சொன்னார் என்பதாக அப்போது பேசிக்கொண்டார்கள்.

பாலசேகரனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு கதை போல எதற்கு இத்தனை வெஞ்சன்ஸ் என்றுதான் பலரும் அந்த சமயத்தில் ஆச்சரியப்பட்டார்கள். பெரிய ஹீரோ படமென்றால் செலவு பெரியதாகத்தான் இருக்கும், வளர்ந்துவரும் ஹீரோவுக்கு இதுபோதும் என்று பொதுவாக ஒரு காரணத்தை பலரும் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தயாரிப்பாளர் தன் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்த உண்மையான காரணம் பின்னாளில் இன்டஸ்டரியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது இதுதான், லவ்டுடே எவ்வளவு மோசமாக எடுக்கப்பட்டாலும் கண்டிப்பாக ஓடும். ஏனென்றால் அதன் கதை அவ்வளவு வலிமையானது. ஆனால் மிஸ்டர் ரோமியோ ஆடம்பரத்தைக் கொண்டு ஓடவைக்கப்பட்டால்தான் உண்டு!

இந்த உதாரணத்திலிருந்து ஏன் சினிமாக்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு பதில் தெரியக் கிடைக்கிறது. அதேபோல்தான் காதலே நிம்மதி என்று ஒரு படம். புதிய இயக்குனர். அவ்வளவாக பிரலமாகியிராத சூர்யா நாயகன், இன்னொரு நாயகன் முரளி. புதுமுக ஹீரோயின். இந்தப் படம் ஒரு முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டது. அது ஃபுட்டேஜ் பற்றாக்குறை!

இயக்குனர் தெளிவாக தன் ஸ்கிரிப்டை ஷுட் செய்து எடிட் செய்து படத்தை முடித்துவிட்டார். ஆனால் படம் இரண்டு மணிநேரம்கூட வரவில்லை. அதற்காக அவர்கள் மெனக்கெடவே இல்லை. க்ளைமாக்ஸில் முன்பாதியில் வந்த சில காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகப் போட்டு படத்தை கொஞ்சம் நீட்டி ஒருவிதமாக ரிலீஸ் செய்துவிட்டார்கள். அந்தப் படத்துக்கு அதற்குமேல் செலவு செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அது அதனளவில் சுமாராக ஓடித்தான் தீரும் என்கிற தீர்மானம்!

கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சினை இயக்குனர் மணிரத்தினத்துக்கு வந்தபோதுதான் மௌனராகம் எனும் அவரது இரண்டாவது தமிழ்ப்படம் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டது. மௌனராகம் படத்தின் ஒரிஜினல் கதை, ஜாலியாக காலேஜுக்குப் போய்க்கொண்டு, குழந்தைபோல் மழையில் நனைந்து குதூகலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை திடீரென்று சம்பந்தமேயில்லாத ஒருவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து பாஷை தெரியாத ஊருக்கு அவனோடு ரயிலிலேற்றி அனுப்பி வைத்தால் என்ன நடக்கும் என்பதுதான்! எமது பெண்களுக்கு தொன்று தொட்டு நடந்துவரும் வெங்கொடுமை இது! தாலிகட்டிய கணவனின் கரம் மேலே பட்டால் கம்பளிப் பூச்சி ஊர்வதுபோலிருப்பதாக அவள் தெரிவிக்கிறாள். கல்யாண தினப் பரிசாக கணவன் டைவர்ஸ் பத்திரத்தை அளிக்கிறான் என்பதாக ஒரு இத்தாலியப் படம்போல வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம், டிஸ்ட்ரிபியூட்டர்களால் ஆக்ஷன் இல்லை அது இல்லை இது இல்லை என்று புறக்கணிக்கப்பட்டபோதுதான் அந்தப் படத்தில் கார்த்திக் பாத்திரம் நுழைக்கப்பட்டது என்பது அப்போது யாவரும் பேசிக்கொண்டிருந்த செய்தி!

கார்த்திக் பாத்திரம் நுழைந்ததும் படம் பரபரப்பை அடைந்துவிடுகிறது. அந்தப் பாத்திரம் மற்றும் காட்சிகளுக்காக மணிரத்தினம் கொஞ்சமும் சிரமப்படவில்லை. அவரது முதல் படமான கன்னடத்தில் வெளிவந்த பல்லவி அனுபல்லவி படத்தில் அனில்கபூரை வைத்து எடுக்கப்பட்டிருந்த அதே ஸ்க்ரிப்டை சாதுர்யமாக இந்தப் படத்தில் நுழைத்து படத்துக்கு ஒரு ஆக்ஷன் சாயம் பூசி சமாளித்தார். இந்த சாதுர்யம் எல்லாம் சரிதான், ஆனால் இதனால் என்ன நிகழ்ந்தது என்பதைப் பாருங்கள், கதை தலைகீழாக மாறிவிட்டது.

சம்பந்தமில்லாத ஓர் ஆண்மகனை கணவனாக ஏற்கத் தயங்கும் இளம்பெண்ணின் உள்ளப் போராட்டத்தைப் பற்றிய உன்னதமான கதை, இறந்துபோன காதலனை நினைத்து கணவனை மறுக்கும் சாதாரண சினிமாத்தனமான மனைவியின் கதையாக உருமாறிவிடுகிறது. இது வினியோகஸ்தர்களின் கைவண்ணத்தால் நிகழ்ந்த கொடுமை. மணிரத்னம் அந்தத் தரத்தில் இதுவரைக்கும் வேறொரு படம் கொடுக்க முயலாததற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

ஆக, தரமாகப் படமெடுக்க விரும்பும் மணிரத்தினம் தைய தைய தையா என்று ரயில் மீது குயில் ஆடுவதுபோல காட்டுவதைத் தவிர்க்கவே இயலாத நிலையிலேயே இருக்கிறார். மும்பைக் கலவரங்களைக் காட்டப் புகுந்தாலும் அந்த அரபிக் கடலோரம் என்று ஒரு பாட்டு போட்டுத் தொலைக்கிறார். இனி மணியின் படத்தில் கூத்தடிக்கிற காட்சிகள் வந்தால் அவரை வையாதீர்கள்.

ஆனால் காமடியன்களோடு கவர்ச்சி நடிகைகளைக் கட்டிப்போட்டு கசமுசா செய்ய வைத்த வகையில் அவர் அடித்த லூட்டி சகிக்க இயலாதது. படம் எடுத்த பிறகு படத்தில் காமெடியே இல்லை என்பதற்காக பல படங்களில் அவர் காமெடி ட்ராக் என்கிற ஒன்றை தனியாகச் செருகி நம்மை இம்சைக்குள்ளாகியதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுவும் இந்தப் பழம்பெரும் நடிகர் வீகேயார், ரெக்கார்ட் டான்ஸ் மேடைக்கு முன்னால் மணலில் உட்கார்ந்துகொண்டு ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு செய்த சேஷ்டைகள் இருக்கின்றனவே, அவற்றுக்காக ஒரு அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரை ஏவி மணியை ஒரு மணி நேரமாவது வெய்யிலில் முட்டி போட்டு நிற்கச் சொல்லலாம்.

இந்த அவசியம் எதனால் அவருக்கு வருகிறது? சினிமா என்பது மசாலாத்தனமானதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பதிவொன்று வினியோகஸ்தர்களின் நெஞ்சில் பதிந்து தொலைத்துவிட்டதனால்தான் இந்த அவலம் நேர்கிறதே தவிர, ரசனை, கலைஞன் ஆகிய ஒன்றுக்கும் இவற்றோடு எவ்விதமான தொடர்பும் இல்லை. வந்த கோபத்தில் பாலுமகேந்திரா இந்தாங்கடா என்று வைப்பதற்கு பதில் நீங்கள் கேட்டவை என்று டைட்டில் வைத்து சிலுக்கு சுமிதாவை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம் தரவில்லையா? நல்ல கலைஞனுக்கு கை நமநமவென்று அரித்துக்கொண்டேதான் இருக்கும் என்கிற வகையில்தான் அதில்கூட களரிப்பயிட்டு, இளையராஜா மற்றும் கேஜேயேசுதாசின் ஆல் டைம் டிலைட்டான கனவு காணும் காட்சி யாவும் கலைந்து போகம் கோலங்கள் எனும் தத்துவப் பாடல் என்று கலந்து கட்டி அடித்திருப்பார் அவர். அந்தப் படம் யார் கேட்டபடி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல யாருக்கும் திராணி இராது.

ஆக, ஒட்டுமொத்தத் தேவை வெற்றி! அதாவது யார் நஷ்டப்பட்டாலும் சரி, வினியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் படம் வெற்றி தோல்வி என்பதை நிர்ணயிக்கும் புள்ளி என்பதாக ஒரு நிலைப்பாடு எழுந்துவிட்டது. ஒரு படத்தைக் கனவு கண்டு அதை அற்புதமாக உருவாக்கித் தரும் கலைஞன் வெற்றியடையவேண்டியதில்லை. உடலையும் மூளையையும் வருத்தி அதில் பணியாற்றிய நடிகர்களும் டெக்னிஷயன்களும் வெற்றி பெற வேண்டியதில்லை, முக்கியமாக தலையை அடமானம் வைத்து பணத்தை முதலீடு செய்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு ப்ரிவ்யூ ஷோ போட்டுக் காட்டும் தயாரிப்பாளன் வெற்றி பெற வேண்டியதில்லை. அந்தப் படத்தை வைத்துக்கொண்டு வியாபாரம் மட்டும் செய்யும் வினியோகஸ்தர்கள் மட்டும் தோல்வி அடைந்துவிடக்கூடாது. இதனால்தான் ரஜினிகாந்த்கூட தன் பாபா படத்துக்காக வினியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டி வந்தது. (அதற்கு பதிலாக படத்தை உருப்படியாக எடுத்திருக்கலாமே பாபா!)

ஆக, பாலசேகரன் நல்ல ஸ்க்ரிப்ட் வைத்திருந்தால் அதை மேலும் வலுவாக்கக்கூடிய அளவுக்கு செலவு செய்து அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க இங்கே தயாரிப்பாளர் இல்லை. கதையில்லை என்பதற்காக செலவு செய்வது என்பது எந்த ஊர் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. கதையில்லாமற்போகத்தானே சிவாஜி என்று ஒரு கிரிமினல் வேஸ்ட் தயாரிக்கப்பட்டது எமது மொழியில்! முதல்வன் நன்றாகத்தானே இருந்தது! சரியான கதை, அதற்கு சரியான செலவு இந்த இரண்டும் சேர்ந்திருந்ததனால் அந்தப் படம் அதற்குத் தகுந்த வெற்றியை ஈட்டியது. ஆனால் சிவாஜி?

ஆக, ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்தாலும் நல்ல படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்மார்த்தம் இல்லையானால் கிருஷ்ணபரமாத்மாக்கள்கூட குசேலர்களாக அலைய வேண்டியதுதான் என்பதுதானே நமக்கு இதிலிருந்து தெரிகிறது! ஆனால் ஒன்று மட்டும்தான் புரியவே மாட்டேனென்கிறது, ‘அப்புறமும் ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன!’

-சுதேசமித்திரன்-

Leave a Reply