மொத்தம் எத்தனை முத்தம்?

4

நாளைக்கு உன் பர்த்டேயாச்சே! என்ன ஸ்வீட் வேணும் சொல்லு… நான் செய்து எடுத்துட்டு வர்றேன் என்றாய் ஆசையாய்.

முத்தம்! என்றேன் நான்.

ஹேய் என்று கைதட்டிச் சிரித்துக் கலாட்டா செய்த உன் தோழிகள் போடீ, போய் உன் உதடு நெறைய செஞ்சு எடுத்துட்டு வா! என்று கத்தினார்கள். தலையில் அடித்துக்கொண்டு ஓடிப்போனாய்.

அடுத்த நாள் நீ வகுப்புக்குள் நுழையும்போது, உன் தோழிகள் எல்லாம் உன் உதட்டையே உற்றுப் பார்த்தபடி கேட்டார்கள்… ?எவ்ளோ செஞ்சு எடுத்திட்டு வந்திருக்கீங்க மேடம்… ஒரு கிலோவா.. ரெண்டு கிலோவா?

நீ டிபன் பாக்ஸ் திறந்து நீட்டினாய். அதில் ஒரு கேக் இருந்தது… உதடு வடிவில்!

மழையில் நனைந்து வந்த என்னைப் பார்த்ததும் பதறிப்போன நீ, இப்படி மழையில் நனைஞ்சா காய்ச்சல் வந்துடும்! என்று திட்டியபடியே, உன் தாவணியால் என் தலை துவட்டிவிட்டாய். அடுத்த நாள் எனக்குக் காய்ச்சல்.

நல்லாத்தானே துவட்டிவிட்டேன். அப்புறம் எப்படிக் காய்ச்சல் வந்தது? என்று கவலைப்பட்டாய்.

இது மழையில் நனைந்ததால் வந்த காய்ச்சல் இல்லை. உன் தாவணியில் துவட்டிவிட்டதால் வந்த காய்ச்சல் என்றேன்.

ச்சீ என்று என்னைக் கிள்ளிவிட்டு ஓடியதும் காய்ச்சல் நின்றுவிட்டது. ஆமாம், அதென்ன கிள்ளலா, இல்லை என் காய்ச்சல் தீர நீ போட்டுவிட்ட அழகான ஊசியா?

அன்று முதல் தாவணி அணிவதே இல்லை நீ. நஷ்டம் எனக்கும் உன் தாவணிக்கும்!

ஒரு வருடம் என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை அலையவிட்டு, கடைசியில் போனால் போகிறது என்று ஏற்றுக்கொண்ட உன்னை என் காதல் கொண்டே பழிவாங்க வேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது… வகுப்பறைக்குள் பேராசிரியர் நுழைந்து மதிப்பெண்களை அறிவிக்க ஆரம்பித்தார்.

எல்லாருக்கும் பத்துக்குப் பத்து. ஆனால், உனக்கு மட்டும் ஏழுதான் என்றார் என்னைப் பார்த்து. அவருக்கு என்னைப் பிடிக்காது என்பதனால் எப்போதும் குறைத்துதான் போடுவார். அதனால் ரொம்ப தேங்ஸ் சார். ஏழு எனக்குப் பிடிச்ச நம்பர் சார்! என்றேன். உனக்கு ஏழரைதானே பிடிக்கும் என்றார் அவர். அது நீங்க பாடம் நடத்தும்போது பிடிக்கிறது சார் என்றேன். சிரித்துவிட்ட ஆசிரியர், அதுசரி.. உனக்கு ஏன் ஏழு பிடிக்கும்? என்றார். ஏன்னா.. நான் இவகூட வாழப்போற ஜென்மம் ஏழு சார் என்றேன் உன்னைக் காட்டி.

மானத்தை வாங்கறானே என்று நீ டெஸ்க்கில் ஒளிந்துகொண்டாய். நீ இந்த டிகிரியை முடிக்க எடுத்துக்கொள்ளப்போற வருஷமும் ஏழு என்று தலையில் அடித்துக்கொண்டு போனார் ஆசிரியர். பிடுங்கித் தின்னும் வெட்கத்துடன் என்னை முறைத்தாய் நீ பேரழகாய்!

சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்…
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!

நீ சுத்த ஏமாளி.
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லாப் பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!

ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்…
நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!

தபூ சங்கர்-

Leave a Reply