மவுனம் பேசாதீர்கள்

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.

ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.


ஏனென்றால் மவுனமாக இருக்கும்போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.

மேலும் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.

முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.