சீர் கொண்டு வா..!

2

amalapaulநீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ… யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது… என்று கத்துவேன் நான் | கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே… என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.

ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு! என்பேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்… என்பாய் நீ.

என்னது… கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா?என்பேன்.

இல்லை! என்று அழுத்திச் சொல்வாய் நீ.

அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினேனே… அது, நீ இல்லையா? என்பேன்.

ஐயையோ… தாலி கட்டினியா! யாருக்கு? என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி… உனக்குத்தான்! என் கனவில்… என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும். நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.

என்ன? என்று கேட்டதற்கு, நீங்க ரொம்பப் பணக்காரங்க… நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க… என்றாய், முகத்தை உம் மென்று வைத்துக்கொண்டு.

நான் மௌனமாக இருந்தேன்.

கேட்பாங்களா? என்றாய் நீ.

எங்க அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க… ஆனால், நான் கேட்பேன்… நிறைய! என்றேன்.

நிறையன்னா… எவ்ளோ? என்றாய் விசனத்தோடு. நிறையன்னா… ரொம்ப நிறைய! உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்… அவற்றை நனவாக்கித் தருவதற்காக! என்றேன்.

நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!
ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்…

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை!

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.

ஆனால்,

நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!

நீஎப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!

ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்…

வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்!

உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்.

தபூசங்கர்-

Leave a Reply